பெண்களைப் புவிப்பரப்பில் இறைவா! படைத்தாய்.
ஆண்களை அவர்கள்பின் அலைக்கழிக்க வைத்தாய்.
அணங்குகளின் அழகினை மேனியிலாக்கி-அவர்களின்
குணங்களை உள்ளுக்குள் மறைத்தாய்!
ஓராயிரம் பெண்டிரைக் கண்டிட்ட போதும்
குணமிக்க மங்கை எவளென்று நானும்
தினம்தினம் பற்பல முகங்களைக் கண்டு
திராணி இழந்தேன் அவர்களுள் பலவிதம் உண்டு.
பேராசை கொண்ட பேதைகளும் உண்டு
பொருளாசை கொண்ட பெதும்பைகளும் உண்டு.
பொன்னாசை கொண்ட பெண்டுகளும் உண்டு.
பொறுமைமிகு பூவையர் சிலரும் உண்டு.
நற்குணமிக்க ஏழை நங்கையரும் உண்டு.
துர்க்குணம் கொண்ட சீமாட்டிகளும் உண்டு.
இன்பத்தை அள்ளிவரும் இனியவளும் உண்டு.
துன்பத்தைக் கொண்டுவரும் காரிகையும் உண்டு.
கர்வமிக்க கன்னிகள் பலரும் உண்டு.
காதல்மிக்க காமுகிகள் சிலரும் உண்டு.
பார்த்தால் பசிதீரும் பத்தினியும் உண்டு.
பார்த்தால் சுட்டெரிக்கும் பாதகியும் உண்டு.
அபூர்வமான சிலபல அணங்குகளும் உண்டு.
அகந்தைமிக்க மடந்தைகளும் அவர்களுள் உண்டு.
அன்புசால், அழகுடைய மாதர்களும் உண்டு.
இன்னும் பலவித அணங்குகளும் உண்டு.
யாரை நான் தேர்ந்தெடுப்பேன் புவியினில் நின்று
புரியாத புதிராக உன் படைப்பினமும் இன்று.
முப்போதும் இசைந்துவரும் முகமுடையாள் தேடி
எப்போதும் அலைந்தேன் தெருக்களும் கோடி.
மெய்யான மங்கை எவளெனக் கண்டு
துய்யகுணமும் மார்க்கப் பேணுதலும் மிகுந்த
துய்யவளை இன்று என் துணைவியாக்கிக்கொண்டு
மெய்யான நபிவாழ்வை இனிதே தொடங்கிவிட்டேன்!