20.12.09

சுயநலவாதி

'வரதட்சிணை ஏதுமின்றி
மஹர்கொடுத்து உன்னை
மணமுடிப்பேன்' என்றான்.
'இஸ்லாமிய ஷரீஅத்தைப்
பின்பற்றுகிறான்' என்றேன்.

'திருமணத்தில்
சடங்கு சம்பிரதாயங்கள்
வேண்டாம்' என்றான்.
'நபிவழிப்படி
நடக்கின்றான்' என்றேன்.

'செலவுகள் குறைந்த
திருமணமே
திருநபிவழி' என்றான்.
உள்ளம் குளிர்ந்து
உவகை கொண்டேன்.

இரகசியமாய் என் மாமி
சில நகைகளைக்
கேட்டபோது-அவரைத்
தடுத்து நிறுத்தினான்.
'கொண்ட கொள்கையில்
உறுதியானவன்' என்றேன்.

'எட்டாம் மாதத்தில்
வளைகாப்பு,
சடங்குகள்
வேண்டாம்' என்றான்.
'இவனல்லோ ஆண்மகன்!'
வியப்பாய் வியந்தேன்.

குழந்தை பிறந்ததும்
அகீகா கொடுத்தான்.
'நபிவழிமுறையை
நடைமுறைப்படுத்திவிட்டான்'
என்றேன்.

பின்னொரு நாளில்
இஸ்லாமிய முறைப்படி
இரண்டாம் திருமணம்
இனிதே செய்திட
ஏற்பாடு செய்தான்.

செய்தியறிந்த நான்
கொதித்தெழுந்தேன்-அவனைக்
குதறிடப் பாய்ந்தேன்-அதை
நிறுத்தும்வரை
நில்லாமல் போராடினேன்!