17.4.14

அழகினும் அழகு! (கவிதை)


அழகினும் அழகு!

படையென மக்கள் புடைசூழ்ந்த சபையில்-நீ
படைத்த இறைவனுக் கஞ்சுவது அழகு
அடைத்த அறைக்குள் ஒண்டியாய் இருந்தும்
படைத்த வல்லோன் இறைவனுக் கஞ்சுவது
அழகினும் அழகு!

உரைத்த சலாமுக்கு உரிய முறையில்
உரைத்தாற்போல் மறுமொழி யுரைத்தல் அழகு
உரைத்த சலாமுடன் உபரியாய் ஒருசொல்
நிறைத்தே நிறைவாய் மறுமொழி யுரைத்தல்
அழகினும் அழகு!

கொலைசெய்த கொலைகாரன் தீயவன் அவனுக்கு
கொலைக்குக் கொலையென நீதிவழங்குதல் அழகு
கொலைசெய்த அவனை மறந்தே மன்னித்து
கொலையுண்ட குடும்பத்தார்க்கு இழப்பீடு வழங்குதல்
அழகினும் அழகு!

தீங்கிழைத்த ஒருவனுக்கு அத்தீங்கின் அளவுக்குத்
தீங்கிழைத்தல் இஸ்லாமியச் சட்டப்படி அழகு
தீங்கிழைத்த அவனின் அத்தீங்கை மன்னித்து
தீங்கிற்குப் பதிலாக நன்மையே  செய்தல்
அழகினும் அழகு!

அளவிடும் பொருளை முறையாக அளத்தல்
அளவிடும் மனிதர்கள் யாவர்க்கும் அழகு
அளவிடும் பொருளோடு உபரியாய்க் கொஞ்சம்
அளவிற்கு மேலாக உவப்புடன் ஈவது
அழகினும் அழகு!

தொழுகைக்குச் செல்லுமுன் உடலுறுப்புகள் தமையே
முழுமையாய் ஒருமுறை கழுவுதல் அழகு
முழுமனிதர் நாயகத்தின் நடைமுறை பேணி
முழுமையாய் மும்மூன்று தடவை கழுவுதல்
அழகினும் அழகு!

திக்கற்ற மனிதர்க்கு முறையான திக்கைப்
பக்கத்தில் சென்று ரைத்தல் அழகு
திக்கற்று நிற்கும் மனிதர் நாடுகின்ற
திக்கின் இலக்கில் உடன்சென்று சேர்த்தல்
அழகினும் அழகு!

ஆண்மையற்ற ஆடவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணொருத்தி
ஆங்காரம் கொள்ளாமல் பிரிந்திடுதல் அழகு
ஆண்மையற் றிருந்தாலும் மறுமையின் நன்மைநாடி
ஆங்கே அவனோடு பொறுமையுடன் வாழ்தல்
அழகினும் அழகு!

மணவாழ்க்கை கொடுத்த கணவனுக் கடங்காதவளை
மணமுறிவு செய்தல் சட்டப்படி அழகு
மணப்பெண் அவளோ தொல்லையே கொடுத்தாலும்
மனந்திறந்து மன்னித்து மகிழ்வுடன் வாழ்தல்
அழகினும் அழகு!

சுயநல மாயினும் மக்கள் நலம்நாடி
உயர்ந்த சேவை யாற்றுதல் அழகு
சுயநலமின்றி மறுமைப் பயன்நாடி மக்கள்
உயர்வுக்காக உவப்புடன் தொண்டா ற்றுதல்
அழகினும் அழகு!