மனிதா!
பொழுது விடிந்துவிட்டது-இன்னும்
உன் உறக்கம் கலையவில்லையா?
உனைப் படைத்தவனை
வணங்கச் செல்லவில்லையா?
அழியப்போகும் அகிலத்தில்
அல்லாஹ்வை நினைக்காமல்
எத்தனை காலந்தான்-நீ
உறங்கிக்கொண்டிருப்பாய்?
எத்தனை காலம்தான்
இந்த உறக்கத்தில்-நீ
சுகம் காணப்போகிறாய்?
பகல் வந்துவிட்டது
இன்னும் நீ
படைத்ததவனை
வணங்கச் செல்லவில்லையா?
படுத்திருந்த உன்னை
விழிக்கச் செய்து பொருள்தேட
ஆற்றல் கொடுத்தவனை
எப்போதுதான்
நீ வணங்கப்போகிறாய்?
இனிய மாலைப்பொழுதும்
வந்துவிட்டது-இன்னும்
உனக்கு இறைவனைப் பற்றிய
எண்ணமில்லையா?
காலை முதல் மாலை வரை
உடலாரோக்கியம் கொடுத்து
உழைக்க வைத்தவன்-உன்
இறைவனல்லவா?
அவனை வணங்காமல்
எப்படி நீ உழைப்பாய்?
அந்தி முடிந்து இரவின்
தொடக்கமும் வந்துவிட்டது.
இன்னும் நீ இறைவனை
வணங்கவில்லையா?
இன்னும்-உன்
இதயம் இளகவில்லையா?
இன்று தொழாவிட்டால்
என்றுதான் நீ
தொழப்போகிறாய்?
இதோ
இரவின் கடைசிப் பகுதியும்
வந்துவிட்டது.
இன்னும் நீ
இறைவனை வணங்கவில்லையா?
உழைப்பதற்கு
ஊக்கம் கொடுத்து
அல்லும் பகலும்
அயராது உழைக்க
ஆற்றல் கொடுத்து
அன்பான மனைவி மக்களையும்
கொடுத்த இறைவனை
இன்னும் நீ வணங்கவில்லையா?
அழியப்போகும் அவனியில்
அயராது உழைத்து
என்ன சாதிக்கப்போகிறாய்?
இறைவனின் உதவியின்றி
இவ்வுலகில் நீ
என்ன செய்திட முடியும்?
எண்ணிப் பார்த்தாயா?
நம்மைப் படைத்த ஓரிறைவன்-நம்
நரம்புகளை இழுத்துவிட்டால்
நம்மால் என்ன செய்ய முடியும்?
எப்படி உழைக்க முடியும்?
விழித்தெழு மனிதா! விழித்தெழு!-உன்
உறக்கத்திலிருந்து விழித்தெழு!
படைத்த இறைவனை
பயபக்தியோடு
அனுதினமும் நீ தொழு!
அவனிடமே நீயழு!