கவிதைகள்

இன்ஷா அல்லாஹ்
விரைவில் வெளிவருகிறது


பாகவியாரின் கவிதைகள்





என் மனத்தினுள் சிறைபட்டுக் கிடந்த சின்னச் சின்ன கருத்துகளை வெளிக்கொணர்ந்து பாரிலோர்க்குப் பரிசாகத் தந்திடப் பரிவுடன் உதவிய அல்லாஹ்வுக்கே புகழ் யாவும்!


கவிஞன் எனும் அடைமொழிக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியபோது, அதன் முதற்கட்ட முனைப்பாகப் பிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கத் தொடங்கினேன். அவர்களின் கருத்தாழமிக்க கவிதைகளைப் படித்து இரசித்தேன்; அவற்றுள் என் மனதை வருடியவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டேன். அதன் பயனாக, காலப்போக்கில் என்னுள் கவிதை ஊற்று சுரக்கத் தொடங்கியது.


என்னுள் புதைந்து கிடந்த கவிப்புலமையை வெளிக்கொணர்ந்த இடம் `இலஜ்னத்துல் இர்ஷாத் எனும் மாணவ மன்றமே ஆகும். வேலூரில் அமைந்துள்ள அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிப் பல்கலைக் கழகத்தில் நான் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த எட்டாண்டுகளில்தான் என்னுள் புதைந்து கிடந்த திறன்களும் திறமைகளும் வெளியுலகை எட்டிப் பார்த்தன. அவற்றோடு ஒட்டிப் பிறந்ததுதான் என்னுடைய இக்கவித்திறன்.


என்னுள் ஊற்றெடுத்துள்ள இது ஒன்றே சாலச் சிறந்த புலமை என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட மாட்டேன். அதேநேரத்தில், நீண்ட கட்டுரை மூலம் பிறர் உள்ளத்தில் பதியச் செய்ய முடியாத ஒரு கருத்தைச் சமுதாய உணர்வுமிக்க ஒரு கவிஞனின் சில வரிகள் அதை எளிதில் பதிய வைத்துவிடும் என்பதை என்னால் மறுக்க முடியாது. இஸ்லாமிய மார்க்கத்தில் நல்ல கவிதைகளுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதால்தான் இத்திறமையை நான் வளர்த்துக்கொள்ள முயன்றேன். என் எளிய கவிச்சொற்களால் துயில்கொண்டுக் கிடக்கும் இளையோரின் இதயங்களைத் தட்டியெழுப்பிவிட வேண்டும் என்று பேராவல் கொண்டேன். என்னுடைய அவ்வெண்ணம் நிறைவேறும்பொருட்டு, அத்திறனைக் கேட்காமலேயே எனக்களித்த பேரிறைவன் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.


உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இக்கவி நூல் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளாக அவ்வப்போது நான் எழுதிய கவிதைகள் பலவற்றுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்துத் தொகுக்கப்பெற்றதாகும். இந்நூலில் அடங்கியுள்ள கவிதைகள் பல, நர்கிஸ், சிந்தனைச்சரம், முஸ்லிம் முரசு, அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா, முஸ்லிம் இதயக்குரல், முத்துச்சுடர், மறுமலர்ச்சி மற்றும் சமரசம் போன்ற மாத இதழ்களிலும் வார இதழ்களிலும் இன்னபிற நூல்களிலும் வெளிவந்தவை ஆகும்.


அவற்றை என் இயற்பெயரிலும் `பாகவியார்’ எனும் புனைப்பெயரிலும் எழுதியுள்ளேன். இந்நூலின் உள்ளடக்கத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். அவை: இறையியல், சமூகவியல், இளைஞர்களே, பொதுச்சிந்தனைகள் ஆகும்.