24.12.09

ஓரணியில் இணைவோம்!

மனிதா!
நீ ஒன்றுபட்டால்தான்
மக்கள் ஒன்றுபடுவார்கள்.
சிதறுண்ட சமுதாயம்
எழுச்சி பெற்றதாய்
சரித்திரம் இல்லை.

"தனிமரம் தோப்பாகாது" 
"ஒரு கையில் ஓசை வராது"
ஒன்றுபட்டால்தான்
உயர்வடைய முடியும்.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"
இதை நீ உணர்வாய்! 

பிரிந்து கிடக்கும் நார்கள்
ஒன்று சேர்வதால்தான்
உறுதிமிக்க கயிறு
உருப்பெறுகிறது.
சிதறிக் கிடக்கும்
பஞ்சு நூ ற்கள் 
ஒன்று சேர்வதால்தான் 
அழகிய ஆடையாகிறது.

பலர் ஒன்றுபட்டால்தான்
கூட்டமாகும்.
உறுப்பினர்கள் பலர்
ஒன்றிணைந்தால்தான்
குழுவாகும்.
அறிஞர்கள் பலர்
ஒன்றுகூடினால்தான்
அவை" யாகும்.

 நாம் சிதறுண்டு
பலமிழந்து கிடந்ததால்தான்
பழங்காலப் பள்ளியை
இழந்து நிற்கிறோம் !

நாம் ஒற்றுமையற்று
வேற்றுமைப்பட்டுக்
கிடப்பதால்தான்
எத்தனையோ அப்பாவி 
முஸ்லிம்களின் உயிர்களை
இழந்து நிற்கிறோம் .

இவ்வளவு காலம்
பிரிந்துகிடந்தது போதும்!
இனியாகிலும் இணைவோம்
ஓரணியில்.

"நீ தனித்தவனாக ஆகிவிடாதே!
அவனோடுதான் ஷைத்தான்
நட்பு கொள்கிறான்”-என்பது
நபிமொழி. 

நபிமொழியை ஏற்று
அதை நீ பின்பற்று!
ஒற்றுமை எனும் கயிறை
இறுக நீ பற்று!
(04-08-2000) 05-05-1421 அன்று மறுமலர்ச்சி வார இதழில் வெளிவந்த கவிதை