29.12.09

மரணம் வருமுன் தொழு!

ஐநேரத் தொழுகை
அனுதினமும்
கடமை என்றேன்-நீ
ஆகாரம் தேடுவதிலேயே
ஆர்வமாய் இருந்தாய்.

உனக்குத் தொழுகை
நடத்துமுன்-நீ
தொழுதுகொள் என்றேன்.
தொழில்செய்யவே
தொடர்ந்து நீ முயன்றாய்.

மரணம் வரும்வரை
மட்டில்லா ஆசைகள்-உன்
இறைவன் நினைவைவிட்டு
அகற்றிவிட வேண்டா என்றேன்.
காதில் வாங்காமல்
கவனமற்று இருந்தாய்!

ஆறிலும்
அழிவு வரலாம்.
நூறிலும்
அழிவு வரலாம்.
ஆகவே அல்லாஹ்வை
ஆர்வமாய்த்தொழுதுகொள்!”
என்றேன்.

நீயோ
வீண்பேச்சு, கேளிக்கை
அரட்டையில் நாள்தோறும்-உன்
நாட்களைக் கழித்தாய்!

தொழு! தொழு! என்று
தொடர்ந்து நான்
சொன்னபோதும்
தொழாத நீயோ
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத்
தொடர்ந்து இரசிப்பதிலே
காலத்தைத் தொலைத்தாய்!

 இதோ-உன்
உயிரைப் பறிக்கின்ற
வானவர் வந்துவிட்டாரே
இப்போது நீ
என்ன செய்யப்போகிறாய்?

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு...

சின்னச்சின்ன விடயத்திற் கெல்லாம் தினமும்
சின்னப்பெண் போல்நீ சிணுங்காதே!-உன்
சிரிப்பை மறந்து சிறிது நேரம்-சுடும்
நெருப்பாய் நீயும் மாறாதே!

இருக்கும் நேரத்தை மகிழ்வாய்க் கழித்து
ஒருவருக் கொருவர் அன்பினைப் பகிர்ந்து
இன்ப நுகர்ச்சி கொள்வதே- இனிய
இல்லற வாழ்க்கை யாம்!

பெண்-ஆண் உரிமையில் சமமே யாயினும்
பெண்ணைவிட ஆண் ஒருபடி மேலேயாம்.
நுண்ணிய மொழிசொல்லும் திருமறையின்
உண்மைக் கூற்றினை உணராயோ?

ஆகாரம்தேடி உனைக் காக்க நாளும்
ஆண்மகன் வெளியில் செல்வானே-அவன்
ஆயிரமா யிரம்பிரச் சினையுடனே-தன்
ஆருயிர் மனைவிதேடி வருவானே.

இல்லம் நுழைந்ததும் எங்கே, ஏன் எனும்
பொல்லாக் கேள்வியைக் கேட்காதே!-அவனுக்கு
தொல்லைகள் தந்து துன்பமிழைத்து-நீ
அல்லல் பட்டு வாழாதே!

அண்டை  வீட்டுப் பெண்டிரோடு-வீண்
சண்டை ஏதும் போடாதே!-அவரோடு
தேவையற்ற பேச்சு வார்த்தையில்-காலமதை
பாவையேநீ வீண் செய்யாதே!

மாமியாரே உன் அன்னை யாவார்
மாமனாரே உன் தந்தை யாவார்.
மாசற்ற மனதுடனே பணிவிடைகள் செய்துநீ
மாநிலத்தில் மகிழ்ச்சியாய் வாழ்வாயே!

செய்யும்செயலைச் சிறப்பாய் செம்மையாய்
செவ்வனே செய்திடப் பழகிக்கொள்-நீ
பொய்யான, நிலையற்ற தரணி யதில்
மெய்யான வாழ்க்கை வாழ்வாயே!

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

நாயன் உனக்கு நலவாய் எழுதிட்ட
நன்மை யாவும் கிடைத்துவிடும்-ஏக
நாயன் அருளுடன் நானிலத்தில் நாளும்
நன்றாய் நலமாய் வாழ்வாயே!
………………………………………………………………………

25.12.09

பாவையர் பலவிதம்

பெண்களைப் புவிப்பரப்பில் இறைவா! படைத்தாய்.
ஆண்களை அவர்கள்பின் அலைக்கழிக்க வைத்தாய்.
அணங்குகளின் அழகினை மேனியிலாக்கி-அவர்களின்
குணங்களை உள்ளுக்குள் மறைத்தாய்!

ஓராயிரம் பெண்டிரைக் கண்டிட்ட போதும்
குணமிக்க மங்கை எவளென்று நானும்
தினம்தினம் பற்பல முகங்களைக் கண்டு
திராணி இழந்தேன் அவர்களுள் பலவிதம் உண்டு.

பேராசை கொண்ட பேதைகளும் உண்டு
பொருளாசை கொண்ட பெதும்பைகளும் உண்டு.
பொன்னாசை கொண்ட பெண்டுகளும் உண்டு.
பொறுமைமிகு பூவையர் சிலரும் உண்டு.

நற்குணமிக்க ஏழை நங்கையரும் உண்டு.
துர்க்குணம் கொண்ட சீமாட்டிகளும் உண்டு.
இன்பத்தை அள்ளிவரும் இனியவளும் உண்டு.
துன்பத்தைக் கொண்டுவரும் காரிகையும் உண்டு.

கர்வமிக்க கன்னிகள் பலரும் உண்டு.
காதல்மிக்க காமுகிகள் சிலரும் உண்டு.
பார்த்தால் பசிதீரும் பத்தினியும் உண்டு.
பார்த்தால் சுட்டெரிக்கும் பாதகியும் உண்டு.

பூர்வமான சிலபல அணங்குகளும் உண்டு.
அகந்தைமிக்க மடந்தைகளும் அவர்களுள் உண்டு.
அன்புசால், அழகுடைய மாதர்களும் உண்டு.
இன்னும் பலவித அணங்குகளும் உண்டு.

யாரை நான் தேர்ந்தெடுப்பேன் புவியினில் நின்று
புரியாத புதிராக உன் படைப்பினமும் இன்று.
முப்போதும் இசைந்துவரும் முகமுடையாள் தேடி
எப்போதும் அலைந்தேன் தெருக்களும் கோடி.

மெய்யான மங்கை எவளெனக் கண்டு
துய்யகுணமும் மார்க்கப் பேணுதலும் மிகுந்த
துய்யவளை இன்று என் துணைவியாக்கிக்கொண்டு
மெய்யான நபிவாழ்வை இனிதே தொடங்கிவிட்டேன்!

24.12.09

ஓரணியில் இணைவோம்!

மனிதா!
நீ ஒன்றுபட்டால்தான்
மக்கள் ஒன்றுபடுவார்கள்.
சிதறுண்ட சமுதாயம்
எழுச்சி பெற்றதாய்
சரித்திரம் இல்லை.

"தனிமரம் தோப்பாகாது" 
"ஒரு கையில் ஓசை வராது"
ஒன்றுபட்டால்தான்
உயர்வடைய முடியும்.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"
இதை நீ உணர்வாய்! 

பிரிந்து கிடக்கும் நார்கள்
ஒன்று சேர்வதால்தான்
உறுதிமிக்க கயிறு
உருப்பெறுகிறது.
சிதறிக் கிடக்கும்
பஞ்சு நூ ற்கள் 
ஒன்று சேர்வதால்தான் 
அழகிய ஆடையாகிறது.

பலர் ஒன்றுபட்டால்தான்
கூட்டமாகும்.
உறுப்பினர்கள் பலர்
ஒன்றிணைந்தால்தான்
குழுவாகும்.
அறிஞர்கள் பலர்
ஒன்றுகூடினால்தான்
அவை" யாகும்.

 நாம் சிதறுண்டு
பலமிழந்து கிடந்ததால்தான்
பழங்காலப் பள்ளியை
இழந்து நிற்கிறோம் !

நாம் ஒற்றுமையற்று
வேற்றுமைப்பட்டுக்
கிடப்பதால்தான்
எத்தனையோ அப்பாவி 
முஸ்லிம்களின் உயிர்களை
இழந்து நிற்கிறோம் .

இவ்வளவு காலம்
பிரிந்துகிடந்தது போதும்!
இனியாகிலும் இணைவோம்
ஓரணியில்.

"நீ தனித்தவனாக ஆகிவிடாதே!
அவனோடுதான் ஷைத்தான்
நட்பு கொள்கிறான்”-என்பது
நபிமொழி. 

நபிமொழியை ஏற்று
அதை நீ பின்பற்று!
ஒற்றுமை எனும் கயிறை
இறுக நீ பற்று!
(04-08-2000) 05-05-1421 அன்று மறுமலர்ச்சி வார இதழில் வெளிவந்த கவிதை

23.12.09

மனிதா விழித்தெழு!

மனிதா!
பொழுது விடிந்துவிட்டது-இன்னும்
உன் உறக்கம் கலையவில்லையா?
உனைப் படைத்தவனை
வணங்கச் செல்லவில்லையா?

அழியப்போகும் அகிலத்தில்
அல்லாஹ்வை நினைக்காமல்
எத்தனை காலந்தான்-நீ
உறங்கிக்கொண்டிருப்பாய்?
எத்தனை காலம்தான்
இந்த உறக்கத்தில்-நீ
சுகம் காணப்போகிறாய்?

பகல் வந்துவிட்டது
இன்னும் நீ
படைத்ததவனை
வணங்கச் செல்லவில்லையா?
படுத்திருந்த உன்னை
விழிக்கச் செய்து பொருள்தேட
ஆற்றல் கொடுத்தவனை
எப்போதுதான்
நீ வணங்கப்போகிறாய்?

இனிய மாலைப்பொழுதும்
வந்துவிட்டது-இன்னும்
உனக்கு இறைவனைப் பற்றிய
எண்ணமில்லையா?

காலை முதல் மாலை வரை
உடலாரோக்கியம் கொடுத்து
உழைக்க வைத்தவன்-உன்
இறைவனல்லவா?
அவனை வணங்காமல்
எப்படி நீ உழைப்பாய்?

அந்தி முடிந்து இரவின்
தொடக்கமும் வந்துவிட்டது.
இன்னும் நீ இறைவனை
வணங்கவில்லையா?
இன்னும்-உன்
இதயம் இளகவில்லையா?
இன்று தொழாவிட்டால்
என்றுதான் நீ
தொழப்போகிறாய்?

இதோ
இரவின் கடைசிப் பகுதியும்
வந்துவிட்டது.
இன்னும் நீ
இறைவனை வணங்கவில்லையா?

உழைப்பதற்கு
ஊக்கம் கொடுத்து
அல்லும் பகலும்
அயராது உழைக்க
ஆற்றல் கொடுத்து
அன்பான மனைவி மக்களையும்
கொடுத்த இறைவனை
இன்னும் நீ வணங்கவில்லையா?

அழியப்போகும் அவனியில்
அயராது உழைத்து
என்ன சாதிக்கப்போகிறாய்?
இறைவனின் உதவியின்றி
இவ்வுலகில் நீ
என்ன செய்திட முடியும்?
எண்ணிப் பார்த்தாயா?

நம்மைப் படைத்த ஓரிறைவன்-நம்
நரம்புகளை இழுத்துவிட்டால்
நம்மால் என்ன செய்ய முடியும்?
எப்படி உழைக்க முடியும்?

விழித்தெழு மனிதா! விழித்தெழு!-உன்
உறக்கத்திலிருந்து விழித்தெழு!
படைத்த இறைவனை
பயபக்தியோடு
அனுதினமும் நீ தொழு!
அவனிடமே நீயழு!

20.12.09

சுயநலவாதி

'வரதட்சிணை ஏதுமின்றி
மஹர்கொடுத்து உன்னை
மணமுடிப்பேன்' என்றான்.
'இஸ்லாமிய ஷரீஅத்தைப்
பின்பற்றுகிறான்' என்றேன்.

'திருமணத்தில்
சடங்கு சம்பிரதாயங்கள்
வேண்டாம்' என்றான்.
'நபிவழிப்படி
நடக்கின்றான்' என்றேன்.

'செலவுகள் குறைந்த
திருமணமே
திருநபிவழி' என்றான்.
உள்ளம் குளிர்ந்து
உவகை கொண்டேன்.

இரகசியமாய் என் மாமி
சில நகைகளைக்
கேட்டபோது-அவரைத்
தடுத்து நிறுத்தினான்.
'கொண்ட கொள்கையில்
உறுதியானவன்' என்றேன்.

'எட்டாம் மாதத்தில்
வளைகாப்பு,
சடங்குகள்
வேண்டாம்' என்றான்.
'இவனல்லோ ஆண்மகன்!'
வியப்பாய் வியந்தேன்.

குழந்தை பிறந்ததும்
அகீகா கொடுத்தான்.
'நபிவழிமுறையை
நடைமுறைப்படுத்திவிட்டான்'
என்றேன்.

பின்னொரு நாளில்
இஸ்லாமிய முறைப்படி
இரண்டாம் திருமணம்
இனிதே செய்திட
ஏற்பாடு செய்தான்.

செய்தியறிந்த நான்
கொதித்தெழுந்தேன்-அவனைக்
குதறிடப் பாய்ந்தேன்-அதை
நிறுத்தும்வரை
நில்லாமல் போராடினேன்!

14.12.09

பச்சிளங்குழந்தை

பச்சிளங்குழந்தையின்
மழலைமொழிகேட்டு
மனம் மகிழும்
மாதா எங்கே?

தொட்டிலில் இட்டு
ஆரிரோ பாடி
தாலாட்டி உறங்கவைக்கும்
அன்புசால் அன்னை எங்கே?

குழந்தையின் பசியறிந்து
தாய்ப்பாலூட்டி
சீராட்டி வளர்க்கும்
உண்மைத்தாய் எங்கே?

பச்சிளங்குழந்தையின்
மழலைச் சொல்கேட்டு
பேசக் கற்றுத்தரும்
பாசமிகு அன்னை எங்கே?

இது
கணினி யுகமாகிவிட்டதால்
தாய்ப்பாசமும்
காணாமல் போய்விட்டதோ?

விஞ்ஞானக் காலத்தில்
மெய்யான தாயரெல்லாம்
பொய்யாகிவிட்டனரோ?
பாசமெல்லாம்
வேசமாகிவிட்டதோ?

வினாத் தொடுக்கின்றது
அன்னையின் அன்பையும்
அரவணைப்பையும் இழந்து
புட்டிப்பாலைப் பருகி
குழந்தைக் காப்பகத்தில்
வளர்கின்ற
பச்சிளங்குழந்தை.

3.12.09

14.11.09

இறைக்காதலர்கள்



நிலையற்ற உலகமதில்
காணுகின்ற காட்சியெல்லாம்
மலைக்க வைத்திடினும்
மனதைக் கவர்ந்திடினும்
மலையருகே அமைந்துள்ள
மக்கா மாநகரின்
'அபா ஆலயத்தை
அலை போன்ற கூட்டத்தினர்
வலம் வருகின்ற-அக்
காட்சிக்கு நிகருண்டோ?

ஆவாரம்பூ தேடிச்செல்லும்
வண்டுபோல
ஆவினை நாடி ஓடும்
கன்றுபோல -இறை
ஆலயம் நாடிச்செல்லும்
அன்பர்களே ஹாஜிகளே!

காதல்கொண்ட  காதலர்கள்-தம்
காதலியைத் தேடிச்செல்வர்.
நீங்களோ
இறைவனின் அருளைத் தேடி
இருப்பிடம் துறந்து சென்ற
இறைக்காதலர்கள்.

அன்னம் தேடிச்செல்லும்
அன்றாட விருந்தாளிகள்
அல்ல நீவிர்.
அன்பையும்  அருளையும்
நாடிச் சென்றுள்ள
அல்லாஹ்வின் விருந்தாளிகள்.
வெள்ளாடை அணிந்துகொண்டு
வேற்றுமையைக் களைந்துவிட்டு
ஒற்றுமையாய் ஓரினமாய்
ஓரிறைவன் ஆலயத்தை
ஒவ்வொரு நாளும்
வலம்வரும் நீங்கள்
வல்லோனின் பார்வையில்
நல்லடியார்கள்.

வன்சொல், தீய செயல்
வீண் பேச்சைத் துறந்து
துன்ப துயரங்களை
இன்பமாய்ச் சுகித்துக்கொண்டு
இன்சொல்லையே உரைக்கும் நீவிர்
அன்பாளன் அல்லாஹ்வின்
சமாதானப் புறாக்கள்.

பன்னாட்டு மக்களோடு
பண்பட்ட இதயத்தோடு
படைப்பாளன் அல்லாஹ்-முதலில்
படைத்திட்ட இறையாலயத்தை
கருணையாளன் அல்லாஹ்வின்
கட்டளைக்கேற்ப
சுற்றிச் சுற்றி வந்து
சற்றும் குறையில்லா
புத்தம் புது மானிடராய்
பிறந்தகம் திரும்பிடுவீர்!

21.10.09






















மீண்டும் நரகாசுரன்


நேற்று
மீண்டும் வந்தான்
நரகாசுரன்.

ஆண்டு முழுவதும்
அரும்பாடுபட்டுச்
சம்பாதித்த பணத்தையெல்லாம்
வெடியாகக் கொளுத்திக்
கரித்தான்
புகைத்தான்.

கூரை வேய்ந்திருந்த அந்த
ஏழை வீட்டின்
ஓலைக் குடிசையையும்
வெடியால் கொளுத்திச்
சாம்பலாக்கினான்.

வெடி எனும்
ஆயுதம் கொண்டு
பலரைக் காயப்படுத்தினான்.
சிலரைக் கொன்றான்.

மற்றோரெல்லாம்
சீக்கிரம் இறந்திடவே
புகையால்
சுற்றுச்சூழலை
நாசப்படுத்தி
மரணவலை விரித்தான்.

வீதிகளையெல்லாம்
குப்பைகளாக்கித்
தோட்டிகளுக்கு
வேலை கொடுத்தான்.

கடும் சப்தவெடிகளை
இரவில் வெடித்து
எங்களின்
இரவுத் தூக்கத்தைக்
கெடுத்தான்-அவன்
மகிழ்ந்தான்.

மீண்டும்
அடுத்த ஆண்டு
வருவேன்-என
எச்சரித்துச் சென்றான்.

27.9.09

எண்ணத்தை விசாலமாக்கு

எனக்குத் தெரிந்த ஆலிம்-எழுத்தாளர்கள் சிலர் தம் எழுதுகோலை மூடிவைத்துவிட்டு ஆன்மிகப் பாதையில் சென்றுவிட்டனர். அவர்களைத் தட்டி எழுப்பிச் சமுதாய மக்கள் பயன்பெறத்தக்க வகையில் அவர்கள் தம் ஆக்கங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும் எனத் தூண்டுவதற்கே இக்கவிதை.

ஆன்மிகமும்-இஸ்லாமும்
பிரிக்க முடியாத
இரட்டை வித்துக்கள்தாம்.
ஆனால்-நீயோ
ஆன்மிகம் மட்டுமே போதும்-என
ஆழ்மனதில் நினைத்துக்கொண்டு
அல்லாஹ்வை நினைவுகூர்வதில்
அனுதினமும் ஈடுபட்டால்
உன் கல்வியால் இச்சமுதாயத்துக்கு
என்ன பயன்?

தஸ்பீஹ் மணிகளை உருட்டுவதால்
நன்மையைப் பெற்றுக்கொள்வது
நீ மட்டும்தான்-ஆனால்
உன்னால் இச்சமுதாயத்துக்குக்
கிடைக்க வேண்டிய
எண்ணற்ற பயன்கள்
முடங்கிவிட்டனவே!

"மக்களுள் சிறந்தவர்
மக்களுக்கு மிகப்பயனுள்ளவரே"-என
நபிகளின் நாயகர்
நவின்றுள்ளதை-நீ
அறியாதவனில்லையே!

பரந்த புவியினைப்போல்-உன்
எண்ணத்தை விசாலமாக்கு.
உயர்ந்த விண்ணைப்போல்-உன்
சிந்தனையை உயர்வாக்கு-உன்
எண்ணத்திற்கேற்பவே- நீ
இறைவனைக் காண்பாய்.

உன் உள்ளத்திற்குள்
புதைந்து கிடக்கின்ற
எண்ணங்களையும் கருத்துகளையும்
வண்ணங்களாக்கு.
மனித மனங்களில்-அவற்றைப்
படிமங்களாக்கு.

எழுந்திரு!
தஸ்பீஹ் உருட்டியதுபோதும்.
முஸ்லிம்கள் நலன்களுக்காக-உன்
பேனாமுனை பேசட்டும்.
அதுவே எதிரிகளைத்
துளைக்கின்ற
கூராயுதமாகட்டும்!

உன்
ஆக்கங்களை வாசிக்க
எத்தனையோபேர்-பெரும்
ஏக்கங்களோடு
எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
எழு! எழுது!

நாளைய உலகின்
சரித்திர ஏட்டில்
உன் பெயரைப் பதிவுசெய்!

நீ மரணித்த பிறகும்
உன் வினைச்சுவடியில்
நன்மைகள் வந்துசேர
இப்போதே நீ-அதற்கான
விதையைத் தூவு!

10.9.09

7.8.09

ஏன்...ஏன்...ஏன்?


பெற்றெடுத்த பெண் மகளைக்
குப்பைத் தொட்டியில்
வீசியெறிந்திடும்
நெஞ்சமற்ற வஞ்சியே
உனக்கேன் இல்லற சுகம்?

ஈன்ற குழந்தைக்குத்
தாய்ப்பாலூட்டி வளர்க்காமல்
புட்டிப்பாலை ஊட்டிடும்
குற்றறிவு கொண்ட நங்கையே
உனக்கேன் இரு கொங்கையே?

பச்சிளங்குழந்தையின்
மழலைமொழி கேட்டு
மகிழ்ந்திடும்
இன்பமறியாமல்
குழந்தைக் காப்பகத்தில்
விட்டுச்செல்லும் அன்னையே
உனக்கேன் குழந்தையே?
உனக்கேன்
அன்னை எனும் பதவியே?

குழந்தையின்
அழுகுரல்கேட்டு
அமுதூட்டிடாமல்
இசையை
இரசித்துக்கொண்டிருக்கிற
இளையவளே!
நீ
இசை மழையில்
நனைகின்றபோது
உன் குழந்தை
கண்ணீர் மழையில்
நனைவதை அறியாயோ?

பெற்றெடுத்த குழந்தையைப்
பெற்றுடன் வளர்க்கக்
கற்றிடாத காரிகையே
உனக்கேன்
கட்டில் சுகம்?

கலிகாலமாதலால்
கல்நெஞ்ச அன்னையர்
மிகுந்துவிட்டனரா?
கணினியுகமாகிவிட்டதால்
தாய்ப்பாசமும்
கரைந்துவிட்டதா?

15.7.09

Get Your Button Code

AddThis - Get Your Button Code

Shared via AddThis

எது உண்மைக்காதல்?




காதல் எனும்
வார்த்தையையே
களங்கப்படுத்திய
காதலர்தின இளவல்களே!
உங்கள் காதல்
உண்மைக் காதலன்று.

வண்டுகள்
மலர்களை ஏமாற்றித்
தேனைப் பருகிவிட்டு
அம்மலர்களைக்
கைவிட்டுவிடுவதைப்போல்

நீங்கள்
உங்களின் மோகத்தால்
நங்கையரின்
தேகசுகத்தை
அனுபவித்துவிட்டுப்
பேதையரின் தேகத்தைக்
கைவிட்டுவிடுகின்றீர்!

ஆம்!
நீங்கள்
தேகத்தைக் காதலிக்கும்
மோகப்பருவத்தில்
மூழ்கிக்கிடக்கின்றீர்!

இல்லையென்றால்
மணமுடித்த
சில மாதங்களிலேயே
மனக்கசப்பும்
மணமுறிவும்
ஏற்படுவதேன்?

மணாளியோ
மணவிலக்குக்கோரி
நீதிமன்றம் செல்வதேன்?

இளைஞனும் இளைஞியும்
தம்பதியராகி
இல்லறத்தில் காதலிப்பதே
இயல்பான காதல்
அதுவே
உண்மைக்காதல்!

9.7.09

18.3.09

நீதிமன்றம்

இது
நிதியை வாங்கிக்கொண்டு
நீதியை விற்குமிடம்.

இதனால்தான்
ஏழைகளுக்கு இது
எட்டாக்கனியாகிவிட்டதோ?

நீதிதேவதை
பார்த்துவிடுவாள்
என்பதற்காகத்தான்
முன்னெச்சரிக்கையாய்
அவளின்
கண்கள் கட்டப்பட்டனவோ?


வழக்குத் தொடுப்போரின்
தரத்தைப் பார்க்கத்தான்
அவளின் கையில்
தராசுத்தட்டோ?

இருட்டறையில்
நிதிபரிமாறப்படுவதால்தான்
அவர்களெல்லாம்
கருப்பங்கி அணிந்துள்ளனரோ?

அல்லது-அவர்கள்
தொடர்ந்து செய்துவந்த
தவறால்
வெண்மையான ஆடை
கருமையாகிவிட்டதா?

இங்குதான்
காசுக்காக
சாட்சி சொல்கின்ற
மனசாட்சியற்ற
மனித மிருகங்களைக்
காண முடியும்!

இன்றுதான் எனக்கு
வா(ய்மை)யே வெல்லும்
என்பதன் பொருள் புரிந்தது.
ஏனெனில்
நடந்து முடிந்த வழக்கில்
அனுபவப்பட்டவன்
நானல்லவா?

31.1.09

சோகங்கள் சுகமாகும்...



வருத்தமே வாழ்க்கையான


நான் _ என்


வருத்தத்தை நீக்கிக்கொள்ள


அருகில் நின்ற ஒருவரிடம்


அளவளாவினேன்.


சிறிது நேரத்தில்


அவரும் தம்


சோகக்கதைகளைச் சொல்லி


அழுகத் தொடங்கிவிட்டார்.



பிறரைக் காண


என் வருத்தமே எனக்கு


பெரிதாய்த் தெரிந்தது.


ஆனால் அவர்கள்தம்


உள்ளக் கிடக்கைகளைக்


கொட்ட ஆளின்றி


உள்ளுக்குள்ளேயே குமுறுவது


அப்போதுதான்


எனக்குப் புலப்பட்டது.



'உள்ளங்கள் அழுதாலும்


உதடுகள் சிரிக்கட்டும்'


எனும் நல்லெண்ணத்தில்


வாழ்வதும் தெரிந்தது.



சோகங்கள் இல்லையெனில்


இன்பத்தின் இனிமை


தெரியாமலே போய்விடும்


என்பதால்தான்


இன்பம் துன்பம்


இரண்டையுமே


இரவு பகலாக


மாறிவரச் செய்துள்ளான்


மறைதந்த இறைவன்.



சோகங்கள் பல இருந்தும்


சிலர் அவற்றை


வெளிக்காட்டுவதில்லை.


ஏனெனில் அவர்கள்


அவற்றை அனுபவித்து


சகித்துக்கொண்டவர்கள்;


அவற்றை இனிதாக


சுகித்துக்கொண்டவர்கள்.



அவற்றையே அவர்கள்


இனிமையாகக்


கருதுவதால்தான்


அவர்களுக்கு_ தம்


சோகங்களெல்லாம்


சுகங்களாகவே


தென்படுகின்றன.



கீறல்களைச்


சகித்துக்கொள்வதால்தான்


சாதாரண மூங்கில்கூட


இனிய ஓசைதரும்


புல்லாங்குழலாகிறது.



செதுக்கல்களைச்


சகித்துக்கொள்வதால்தான்


சாதாரண கல்கூட


அழகுமிகு சிற்பமாகிறது.



சோகங்கள் சுகமாகும்...


அவற்றைச் சகித்துக்கொண்டால்;


அவற்றையே சுகித்துக்கொண்டால்.


அல்லாஹ் ஒருவன் மீது


நம்பிக்கை கொண்டால்.


**************




11.1.09

Ayishah Arabic Typing Centre


Ayishah Arabic Typing Centre

N.Abdul hadi Baquavi, M.Phil.
Mobile: 9444354429
Phone : 044-25916380
Email : hadi2abshar@gmail.com
Web blog:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
My services: Translation:
Arabic-Tamil
Urdu- Tamil
English-Tamil
Typing:
Arabic, English &Tamil
Proofreading:
Tamil, English and Arabic books
Note: All are available by online also.