1.1.10

கன்னியின் திருமணம்

இத்தனை நாள்
பொறுமையாய்க் காத்திருந்த
கன்னி எனக்கு
இன்று திருமணம் நடக்கின்றது!

மணாளனோ அழகன்;
படித்துப் பட்டம் பல
பெற்றவன்.

மஹ்ர் கொடுத்து
மணமுடிப்பேன்;
வரதட்சிணை வேண்டாமென்றான்.

மணப்பெண் எனக்கோ
மட்டில்லா மகிழ்ச்சி.
ஓர் ஆண்துணை கிடைத்துவிட்டதால்
முகமெல்லாம் மலர்ச்சி.

எனைப் பாரமாய்
நினைத்திருந்த தந்தைக்கு
வாயெல்லாம் பல்லு.

எல்லோரும் ஒன்றுகூடி
என் திருமணம் நடக்கின்றது.

ஆலிம்சா வந்தாச்சு
குத்பாவும் ஓதியாச்சு.
ஈஜாபு கபூல்
சொல்லுமுன்னே
பாவி நான்
விழித்துவிட்டேன்-என்
கனவும் கலைந்துவிட்டது!


(நர்கிஸ் மே 2001 இதழில் வெளிவந்த கவிதையிது.)