21.1.10

பணமே! பணமே!

அருளில்லார்க்கு
அவ்வுலகில்லை
 பொருளில்லார்க்கு
இவ்வுலகில்லை-எனும்
நன்மொழி படித்து
உன்னை நேசித்தேன்.

அல்லும் பகலும்
அயராதுழைத்தேன்.
அவனியில் வாழ்ந்திட
அயராதுழைத்தேன்.

உனைத்தேடித் தேடி-என்
உறவுகளை மறந்தேன்.
உனைத்தேடி அடைந்திட
பல்லிடம் அலைந்தேன்.

படைத்தோன் விதித்த
தடைகளை மீறி-உனை
ஈட்டிச் சேர்த்தேன்.
வட்டியில் ஈட்டிய
மொத்தப் பணத்தையும்
பெட்டியில் வைத்தே
பூட்டினை இட்டேன்.

உன் மூலம்-நான்
நிம்மதி பெறவே
உனைத் தேடி உலகினில்
நாள்தோறும் அலைந்தேன்.
அயல்நாடு சென்று
அயராதுழைத்தேன்.
உவர்நீர் சிந்தி
உற்சாகமாய் உழைத்தேன்.

உற்ற மனைவியை
பெற்ற பிள்ளைகளை
பற்றின்றி துறந்தேன்.

ஆனால்
நீ வந்த பின்பே
நிம்மதியிழந்தேன்.
நித்தமும் கட்டிலில்
நித்திரை இழந்தேன்.

உனை அடைந்திடவே
இத்தரணியில்
எத்தனை குற்றங்கள்!
எத்தனை கொலைகள்!

பணம் பாதாளம்வரை
பாயும்.
பணம் பத்தும்
செய்யும்.
பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே.
உனக்குத்தான்
எத்தனையெத்தனை
பழமொழிகள்!

உனை அடைந்திடத்தானே-ஒரு
வஞ்சியவள்
வேசியானாள்.

உனைப்
பெற்றிடத்தானே
பெற்றவளையே-ஒரு
தனயன் கொன்றான்.

உனைப் பெற்றிடத்தானே
உடன்பிறந்தானின்
உயிரையே பறித்தான்.

உனை அடைந்திடத்தானே-பல
தடைகளை மீறி-பிறர்
உடைமைகளைக்
களவு செய்தான்.

உனைப் பெற்றிடத்தான்
எத்தனையெத்தனை
குறுக்கு வழிகளை
குறுமதி மானிடன்
கைக்கொள்கிறான்.

பெருவாரியாக-உனைப்
பெற்றிட எண்ணி
கள்ளத்தனமாய்
கள்ள நோட்டடித்தான்.
இன்று-அவன்
சிறையறைக்குள்
சிக்குண்டு தவிக்கிறான்