காலம் கெட்டுவிட்டது-என
என்னைத் திட்டாதே!
உன்னை நீயே திட்டிக்கொள்!
காலம் என்றும் கெடுவதில்லை
காலத்தில் வாழும்
மானிடனே கெட்டுவிட்டான்.
இஸ்லாம்
மூடப்பழக்கத்தை
ஒழித்த பின்பும்-நீ
அதிலேயே
மூழ்கிக் கிடப்பதேன்?
விஞ்ஞான உலகிற்கு-நீ
வருகை தரமாட்டாயா?
நல்ல நேரம்
கெட்ட நேரம்-என
என்னில் பிரிவினையை உண்டாக்கிய
குறுமதி மனிதா!
அறிவுலகம் வா! வா!
ஆரூடம் பார்த்து
ஆராய்ச்சி பல செய்து
நல்ல நேரமதைத்
தேர்ந்தெடுத்து மணமுடித்த
நீ மட்டும்
நிம்மதியாய் வாழ்கிறாயா?
கைரேகை பார்க்காமல்
பஞ்சாங்கத்தை நம்பாமல்
மணமுடித்த நல்லோர்களும்
இறைநம்பிக்கையாளர்களும்
இன்பமாய் வாழவில்லையா?
இன்பமும் துன்பமும்
இறைவிதிப்படி நடக்குமடா!
காலத்தைத் திட்டுவதால்
கண்ணியந்தான் கிடைத்திடுமா?
காலத்தை வெறுப்பதனால்
கவலைகள்தாம் நீங்கிடுமா?
கணினி யுகத்திலும்
கண்மூடித்தனமாக
அறியாமையில் உழலும் உன்
அறியாமையை என்னென்பேன்!
வினை செய்யச் சென்றபோது
பூனை குறுக்கே சென்றதினால்
வீணாகிப் போய்விடுமோ-உன்
வினையும் அன்றைக்கு?
விஞ்ஞானம் வளர்ந்ததினால்
மெஞ்ஞானம் குறைந்ததுவோ?
பட்சிகளின் ஆரூடம்
மெதுவாகக் கரையேறி
கம்ப்யூட்டர் ஆரூடம்
கச்சிதமாய்த் தொடர்கிறதே!
இன்டர்நெட் காலத்திலும்
அறிவிலிகள் எத்தனைபேர்!
விண்கலம் தயாரித்து
விண்ணுக்கு அனுப்புமுன்னே
மண்ணதிரத் தேங்காயுடைத்து
கண்மூடி பூசைசெய்து
விஞ்ஞானிகளுக்கே
விஞ்ஞானம் சொல்லும்
வித்தகர்கள் நாட்டிலுண்டு.
நேரம் என்பதெல்லாம்
காலத்தை அறிவதற்கே!
நாட்கள் என்பதெல்லாம்
இரவு பகல் அறிவதற்கே!
மாதங்கள் என்பதெல்லாம்
ஆண்டினை அறிவதற்கே!
ஸஃபர் எனும்
இரண்டாம் மாதம்
பீடையென அழைக்காதீர்!
மூடப்பழக்கங்களில்
மூழ்கிக் கிடக்காதீர்!
மூடப்பழக்கங்களை
முதுகிற்குப் பின்னெறிந்துவிட்டு
முறையான இஸ்லாத்தில்
முழுமையாக நுழைந்திடுவீர்!