22.1.10

பணமே வருகை தருவாயா?


 

நீ
செல்வந்தர்களோடுதானே
உறவு வைத்துக்கொள்கிறாய்!
அவர்களைத்தானே
அன்றாடம் நீ
தேடிச் செல்கிறாய்!

ஏழைகள் எங்களின்
வீட்டுக்கு
வருகை தந்து-எம்
வறுமையைப்
போக்கமாட்டாயா?

நீயும்
கேடுகெட்ட மானிடரைப்
போன்றுதானோ?
அவர்கள்தாம்
வசதியுடையோருடனே
ஒட்டிக்கொள்வர்.
வசதியற்றோரை
வெட்டிக்கொள்வர்.

நீ
செல்வந்தர்களின்
இல்லங்களில்
சோம்பேறியாய்த்
துயில்கொள்வதைவிட
ஏழைகள் எங்களின்
குடிசைகளுக்கு
வருகை தந்து-எங்களின்
வயிறுகள் நிரப்பலாமே!

நீ ஏன்
செல்வந்தர்களின்
பெட்டிகளுக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றாய்?

எங்களின்
இல்லங்களுக்கு-நீ
வருகை தந்தால்
நாங்கள் உனைச்
சுதந்திரமாகத்
திரியவிடுவோமே!

செல்வந்தர் வீட்டில்
சிறைபட்டுக் கிடப்பதே
உன் விருப்பமா?
ஏழைகள் எங்களின்
இல்லங்களுக்கு
வருகை தந்து
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கமாட்டாயா?

 ஏழை வீட்டுக்கு
வருகை தந்து-எங்கள்
குழந்தைகளின்
பசிபோக்க மாட்டாயா?

எங்கள் பிள்ளைகளின்
உயர்படிப்புக்கு
உதவிசெய்ய மாட்டாயா?

இங்கே
வெம்பி வாடும்-முதிர் 
கன்னிப் பெண்டிரின்
திருமணத்தை
நடத்தி வைக்கமாட்டாயா?

தினம் தினம்
துன்பத்தில் துவளும்-எங்கள்
துயரத்தைக் களைந்திட-எம்
இல்லங்களுக்கு-நீ
என்றுதான்
வருகை தருவாயோ?

உன்
வரவுக்காகக்
காத்திருக்கும்
பரம ஏழை..