29.12.08

என் குற்றமா? உன் குற்றமா?


'தஞ்சை மாவட்டத்தில், வெளிநாடு சென்றுவிட்ட ஒருவரின் துணைவி, தான் கற்புநெறி தவறிவிட்டதை மக்கள் அறிந்துகொண்டார்கள் என்பதால் தன் உயிரைத் தூக்குக் கயிறுக்கு இரையாக்கிக்கொண்டு விட்டாள்'_ எனும் கசப்பான (உண்மையான) செய்தியைச் செவியுற்று என் உள்ளம் அழுகத் தொடங்கியது. அத்துடன் அவள் சார்பாக சில வினாக்களை வினவத் தொடங்கியது.


என் இனிய துணைவனே!

உன் துணைவிதான் பேசுகிறேன்.

மணமுடித்த சில

மாதங்களிலேயே- நீ

பணம் சம்பாதிக்கப்

பயணித்துவிட்டாய்.

பருவ மங்கை- எனை

அன்றே மறந்துவிட்டாய்.


பலரும் நமை வாழ்த்த

பெரியோர் முன்னிலையில்

மலர் முகத்தோடும்

நகர் வலத்தோடும் நமக்கு

மணமுடித்து வைத்ததேன்?

நீயும் நானும்

தனித்தனித் தீவுகளாய்

தனிமையில் வாடிடவா?

அல்லது

தனிமையில் ஒன்றிணைந்து

இனிமையாய் உறவாடிடவா?


துணைவியின்

தேவைகளைத் தீர்ப்பது

துணைவனின் கடமையல்லவா?

துய்யவனே- உன்

துணைவி எனை- நீ

மறந்ததேன்? -தாயகம்

துறந்ததேன்?


நீ

பாடுபட்டு அனுப்பிய

பணமெல்லாம் - என்

வயிற்றுப் பசியைத்தான்

தீர்த்தது- என்

காமப்பசிக்கு - எதை நீ

அனுப்பிவைத்தாய்?


அன்றொரு நாள்

உன் பேச்சை

ஒலிநாடாவில்

அனுப்பிவைத்தாய்.

ஆனால்- என்

வலி தீர

வழி செய்தாயா?


எத்துணை காலம்தான்

என் உணர்ச்சிகளுக்குப்

பூட்டுப் போட முடியும்?

எத்துணை காலம்தான்

உனை எதிர்பார்த்துக்

காத்திருக்க முடியும்?


அணைபோட்டு

தண்ணீரை

அடைத்து வைத்தபோதும்

அதையும் மீறி

வழிந்தோடுவதில்லையா?


என் உள்ளுணர்வுகளை

பலப்பல பூட்டுகள் இட்டு

தாழிட்ட போதும்

அணைபோட்டு

அடக்கிவைத்தபோதும்

அதையும் மீறி

அன்றொரு நாள்

கொதித்தெழுந்தபோது- என்

புத்தி தடுமாறி

புதைகுழியில் விழுந்துவிட்டேன்.


அறியா மக்களெல்லாம்- இந்த

அரிவையின் செயலைக் கண்டு

தூற்றினர், துப்பினர்.

வாழ வழியறியா

வாழைக்குமரி நான்

மாலை வேளையிலே- எனைத்

தூக்குக் கயிறுக்கு

இரையாக்கிக்கொண்டேன்.


இஃது

என் குற்றமா?

உன் குற்றமா?

நீயும் என்னோடு வா!

நாளை நாம்

இறைவனிடம் பதில் சொல்வோம்!



இது அஷ'ஷரீஅத்துல் இஸ்லாமிய்யா மாத இதழில் பிப்ரவரி 2003 அன்று பிரசுரிக்கப்பட்டது.