21.11.15

மீண்டும் நரகாசுரன்



நேற்று
மீண்டும் வந்தான்
இல்லாப் பெயர்கொண்ட
மூட நரகாசுரன்.

ஆண்டு முழுவதும்
அரும்பாடுபட்டுச்
சம்பாதித்த பணத்தையெல்லாம்
வெடியாகக் கொளுத்திக்
கரித்தான்;
புகைத்தான்.

கூரை வேய்ந்திருந்த அந்த
ஏழை வீட்டின்
ஓலைக் குடிசையையும்
வெடியால் கொளுத்திச்
சாம்பலாக்கினான்.

வெடி எனும்
ஆயுதம் கொண்டு
பலரைக் காயப்படுத்தினான்;
சிலரைக் கொன்றான்.

மற்றோரெல்லாம்
சீக்கிரம் இறந்திடவே
நச்சுப் புகையால்
சுற்றுச்சூழலை
நாசப்படுத்தி
மரணவலை விரித்தான்.

வீதிகளையெல்லாம்
குப்பைகளாக்கித்
தோட்டிகளுக்கு
வேலை கொடுத்தான்.

கடும் சப்தவெடிகளை
இரவினில் வெடித்து
எங்களின்
இரவுத் தூக்கத்தைக்
கெடுத்தான்-அவன்
மகிழ்ந்தான்.
மீண்டும்
அடுத்த ஆண்டு
வருவேன்-என
எச்சரித்துச் சென்றான்.

                                                     -பாகவியார்
================================


17.10.15

ஆணாகப் படைத்ததேன்?


                                                -பாகவியார்
இறைவன் உன்னை
ஆணாகப் படைத்ததேன்?
பெண்ணை
நிர்மூலமாக்க அல்ல!
நிர்வாகம் செய்யத்தான்!
அவளின் கற்பைச்
சூறையாட அல்ல!
உன் சகோதரியாய்க்
கவனித்துக்கொள்ளத்தான்!
கண்ட இடங்களில்
வம்பு செய்ய அல்ல!
உன் அன்னையைப் போல்
அன்பு காட்டத்தான்!

உன்னை
ஆணாகப் படைத்ததேன்?
பெண்ணிடம்
கைநீட்டிப்
பெறுவதற்காக அல்ல!
மஹர் கொடுத்து
மங்கை நல்லாளை
மணமுடிக்கத்தான்!

உன்னை
ஆணாகப் படைத்து
நிதானத்தை வழங்கியதேன்?
அவள் அறியாமையால்
சினம் கொள்ளும்போது
மனம் வெதும்பாமல்
எதிர்கொள்ளத்தான்!

உன்னை
ஆணாகப் படைத்து
வீரத்தை வழங்கியதேன்?
கட்டிய மனைவியை
ஓங்கி அடிப்பதற்காக அல்ல!
அவளுக்கொரு
துன்பமென்றால்
துணிவோடு போராடத்தான்!

உன்னை
ஆணாகப் படைத்து
பொறுப்பை வழங்கியதேன்?
அவள் உழைப்பில் நீ
உண்பதற்காக அல்ல!-நீ
உழைத்து
அவளுக்கு
உணவு வழங்கத்தான்!

உன்னை
ஆணாகப் படைத்துப்
பெண்ணைவிட
ஒரு படி
உயர்வைக் கொடுத்ததேன்?
அவளை அடிமையாய்
நடத்துவதற்காக அல்ல!
அவளின் தேவைகளை
முறைப்படி

நிறைவேற்றிடத்தான்!