திருக்குர்ஆன் விரிவுரையைத்
தினந்தோறும் திறந்தோதுவோர்
திருக்குறளைத் திறந்திட்டால்
திருக்கரங்கள் கறையாகுமோ?
குர்ஆனைத் தொடும் கரங்கள்
குவலயத்தை இணைக்கின்ற,
குக்கிராமத்தில் பரவிவிட்ட
இணையத்தைத் தொடுவது
இணையற்ற தீங்காகுமோ?
அல்லாஹ்வின் வேதத்தை
நன்றாகக் கற்றவர்கள்
ஆட்சியர் ஆகுவதும்
அதிகாரத்தைப் பெற முனைவதும்
அடாத பாவமாகுமோ?
அருள்மறையின் மொழியான
அரபிமொழி கற்றவர்கள்
ஆங்கிலத்தைக் கற்பது
அல்லாஹ்வுக்கு எதிராகுமோ?
அரபிக் கல்லூரிக்குள்
ஆங்கிலமும் கணினியும்
அவசியம் கருதி
அன்றாடம் கற்பித்தல்
ஷரீஅத்துக்கு முரணாகுமோ?
ஒரு வட்டத்திற்குள்
ஒடுங்கிவிட்டவர்கள்
வட்டத்தின் வெளியே
எட்டிப் பார்க்க முனைவது
வெட்டி வேலையாகுமோ?
எட்டாக் கனியை
எட்டிப் பிடிக்கத் துணிவதும்
கிட்டாத பணியை
முட்டிமோதிப் பெறுவதும்
சட்டப்படி பிழையாகுமோ?
பிறருக்குப் போட்டியாய்
போட்டியிட்டு உழைப்பதும்
பிறருக்குப் போட்டியாய்
போட்டியிட்டுச் சம்பாதிப்பதும்
இஸ்லாத்தில் தடையாகுமோ?
காலமே கருதி
கடமையைச் செய்யாமல்
காலம் தாழ்த்தி,
கல்போன்று வாழ்வது
கல்வி கற்றோர்க்கு அழகாகுமோ?
காலத்தின் அருமை கருதி
பல்வகைத் திறமைகளை
நல்வகையில் பெருக்கிக்கொள்ளல்
எவ்வகையில் பாவமாகுமோ?
உலக மக்கள் யாவருமே
உயரப் பறக்க முனையும்போது-நீ
ஒடுங்கியே வீட்டுக்குள்
நடுங்கியே வாழலாகுமோ?
விழிக்காத உன் கண்கள்
வழிதேடாமல் உறங்கலாகுமோ?
உன் வாழ்வில் நீ உயர
நான் உனைத் தூண்டுவது
என்மீது பிழையாகுமோ?
உன்மீது பிழையாகுமோ?