18.3.09

நீதிமன்றம்

இது
நிதியை வாங்கிக்கொண்டு
நீதியை விற்குமிடம்.

இதனால்தான்
ஏழைகளுக்கு இது
எட்டாக்கனியாகிவிட்டதோ?

நீதிதேவதை
பார்த்துவிடுவாள்
என்பதற்காகத்தான்
முன்னெச்சரிக்கையாய்
அவளின்
கண்கள் கட்டப்பட்டனவோ?


வழக்குத் தொடுப்போரின்
தரத்தைப் பார்க்கத்தான்
அவளின் கையில்
தராசுத்தட்டோ?

இருட்டறையில்
நிதிபரிமாறப்படுவதால்தான்
அவர்களெல்லாம்
கருப்பங்கி அணிந்துள்ளனரோ?

அல்லது-அவர்கள்
தொடர்ந்து செய்துவந்த
தவறால்
வெண்மையான ஆடை
கருமையாகிவிட்டதா?

இங்குதான்
காசுக்காக
சாட்சி சொல்கின்ற
மனசாட்சியற்ற
மனித மிருகங்களைக்
காண முடியும்!

இன்றுதான் எனக்கு
வா(ய்மை)யே வெல்லும்
என்பதன் பொருள் புரிந்தது.
ஏனெனில்
நடந்து முடிந்த வழக்கில்
அனுபவப்பட்டவன்
நானல்லவா?