-பாகவியார்
இறைவன் உன்னை
ஆணாகப் படைத்ததேன்?
பெண்ணை
நிர்மூலமாக்க அல்ல!
நிர்வாகம் செய்யத்தான்!
அவளின் கற்பைச்
சூறையாட அல்ல!
உன் சகோதரியாய்க்
கவனித்துக்கொள்ளத்தான்!
கண்ட இடங்களில்
வம்பு செய்ய அல்ல!
உன் அன்னையைப் போல்
அன்பு காட்டத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்ததேன்?
பெண்ணிடம்
கைநீட்டிப்
பெறுவதற்காக அல்ல!
மஹர் கொடுத்து
மங்கை நல்லாளை
மணமுடிக்கத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்து
நிதானத்தை வழங்கியதேன்?
அவள் அறியாமையால்
சினம் கொள்ளும்போது
மனம் வெதும்பாமல்
எதிர்கொள்ளத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்து
வீரத்தை வழங்கியதேன்?
கட்டிய மனைவியை
ஓங்கி அடிப்பதற்காக அல்ல!
அவளுக்கொரு
துன்பமென்றால்
துணிவோடு போராடத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்து
பொறுப்பை வழங்கியதேன்?
அவள் உழைப்பில் நீ
உண்பதற்காக அல்ல!-நீ
உழைத்து
அவளுக்கு
உணவு வழங்கத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்துப்
பெண்ணைவிட
ஒரு படி
உயர்வைக் கொடுத்ததேன்?
அவளை அடிமையாய்
நடத்துவதற்காக அல்ல!
அவளின் தேவைகளை
முறைப்படி
நிறைவேற்றிடத்தான்!