20.10.10

விதியை ஏற்று நடைபோடு!

புதுசு


இனிய திசைகள் செப்டம்பர் 2010

23.9.10

மாநபியும் மருத்துவமும்

நான் இதற்கு முன் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தாலும், என்னுடைய சொந்த நூல் எனும் அடிப்படையில் இதுவே முதல் நூல் ஆகும்.  நான் முஸ்லிம் இதயக்குரல் மாத இதழில் தொடர் கட்டுரையாக எழுதிவந்த மாநபியும் மருத்துவமும் எனும் அதே தலைப்பிலேயே இந்நூலை வெளியிட்டுள்ளேன். இதில் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளுக்கேற்ப தற்கால மருத்துவக் கருத்துகளையும் ஆய்வு செய்து எழுதியுள்ளேன். இது ஒரு பயனுள்ள நூல் என்பதில் சந்தேகமில்லை. இதன் விலை ரூபாய் 20 மட்டுமே. இதைச்  சென்னை மண்ணடியிலுள்ள பஷாரத் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலைப்பெற: 044 25225028

22.9.10

நபிமார்கள் வரலாறு (முதல் பாகம்)


தமிழாக்கம்:  காரீ நூ அப்துல் ஹாதி பாகவி M.A., M.Phil.
                         ஆலங்குடி 

15.9.10

விரைவில் வெளிவருகிறது!




முஹம்மது முஸ்தபா அல்ஜிபாலீ ஆங்கிலத்தில் எழுதிய முஸ்லிம் பேமிலி எனும் நூலைமௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி தமிழாக்கம் செய்துள்ளார். இஸ்லாமிய இல்லறம்எனும் தலைப்பில் விரைவில் வெளிவருகிறது. சென்னையில் உள்ள சாஜிதா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.  இந்நூலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள், திருமணம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களோடு கூறப்பட்டுள்ளன.
தம்பதிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அரிய நூல்.  பக்கங்கள்:  448  விலை:  ரூ. 175/-    அலைபேசி : 9840977758

8.9.10

நூல் மதிப்புரை (தினமணி)

                                                                                                                      Dinamani 06 09 2010

13.4.10

இறைமேல் நேசம்


எல்லோரும் உறங்கும்

நடுநிசி நேரத்தில்
படைத்தவன் பற்றிய
பயம் எனைப் பற்றவே
தூக்கத்தை எறிந்துவிட்டு
துன்பத்தைத் தாங்கி-இறை
பக்தனாக மாறிட
பக்கத்திலிருந்த
சனி நீரை எடுத்து
பனியென்றும் பாராமல்
உடல்சுத்தி செய்து
உறுதியாய் நின்றேன்.
நடுநிசித் தொழுகையை
நலவாய் முடித்தேன்.

பணத்தை விரும்பாமல்
பதவியைக் கேட்காமல்
படைத்தோனை நினைத்து
கண்ணீருடனே
கரமிரண்டை நீட்டிக்
கருணையாளனின்
அருள்வேண்டி நின்றேன்.

மாரெல்லாம் குளிரும்
மார்கழி மாதத்தில்
மாரியும் பனியும்
பொழியும் நேரத்தில்
உணர்வின்றி
உறங்கிக் கிடந்த நான்
படைத்தோன் பள்ளியில்
பாங்கொலி கேட்டு
பட்டென எழுந்து
சட்டென விரைந்து
குளிர்ந்த நீரில்
உடல் சுத்தம் செய்து
உயர்ந்தோன் அல்லாஹ்வை
வழிபடச் சென்றேன்.

எத்துணை பொருட்கள்
இத்தரணியில் இருந்தாலும்
உன்னையே நேசிப்பேன்
உன்னிடமே யாசிப்பேன்.

11.3.10

10.2.10

இளமைப் பருவம்



இஃதொரு
பைத்தியக்காரப் பருவம்.

கெட்டதை நல்லதாகவும்
நல்லதைக் கெட்டதாகவும்
கற்பனை செய்து காட்டும்.

வேகமிருக்கும்
விவேகமிருக்காது.

மூத்தோரின்
மூதுரைகளெல்லாம்
மூளையில் ஏறாது.

தான் எடுத்த முடிவே
சரியானதென
வாதிக்கும்.

கற்பனையில் பல
அற்புதங்களைக் காட்டும்.
ஆனால்-அவையோ
நிகழ்வுக்கு ஒத்துவரா.

யுவன் யுவதியையும்
யுவதி யுவனையும்
யூகத்தில் தேர்ந்தெடுப்பர்;
தேகத்தைக் காதலிப்பர்.
கலியுகத்தில் அது
காணாமல் போய்விடும்.

ஈருடல்கள் இடையே
ஈர்ப்பு ஏற்படும்.
இனக்கவர்ச்சியால்
இனம்புரியாத
காதல் ஏற்படும்!

உடம்பைக் காதலிக்கும்
மடமைப் பருவமிது.

இது
காந்தம் போன்றது.
யாராகிலும் ஒருத்தியை
ஈர்த்துக் கொள்ளவே
துடிக்கும்; விரும்பும்.

இருவருக்கும் இடையே
பொருத்தம் பார்க்காது.
விரும்பும் உள்ளங்கள்
நெருங்கிடத் துடிக்கும்.
நெருப்பாகப் பெற்றோர்
குறுக்கிடும்போது
வருத்தம் மிகும்.

உற்றார் உறவினர்
பெற்றோர் மற்றோர்
யாவரையும்-உடனே
உதறிடத் துணியும்.

உறவுகள் முறித்தும்
உயிரினைப் பறித்தும்
உரியவள் அவளை
அடைந்திடத் துடிக்கும்.

பாவையை அடைந்திட
அவள் கரம் பற்றிட
யாவையும் துறக்கத்
துணிவைக் கொடுக்கும்.
யாரையும் எதிர்த்திடத்
துணிச்சலைக் கொடுக்கும்.

யாவையும் துறந்து
பாவையை அடைந்து
சின்னாட்கள் அவளுடன்
சல்லாபம் கொண்டபின்
பாவை அவளோ
பாகற்காயாய்க் கசப்பாள்.

இருவருக்குமிடையே
அருவருப்பு அரும்பும்.
சிறுசிறு பிழையும்
பெரிதாய்த் தெரியும்.

பொறுத்திட முடியாமல்
வெறுத்திடத் தூண்டும்.
பிரிந்துவிடுவதே
சரியெனத் தோன்றும்.

முதியோர் கூற்றை
மதியாதார் வாழ்க்கை
பட்ட மரம்போல்
பட்டெனச் சாயும்.



22.1.10

பணமே வருகை தருவாயா?


 

நீ
செல்வந்தர்களோடுதானே
உறவு வைத்துக்கொள்கிறாய்!
அவர்களைத்தானே
அன்றாடம் நீ
தேடிச் செல்கிறாய்!

ஏழைகள் எங்களின்
வீட்டுக்கு
வருகை தந்து-எம்
வறுமையைப்
போக்கமாட்டாயா?

நீயும்
கேடுகெட்ட மானிடரைப்
போன்றுதானோ?
அவர்கள்தாம்
வசதியுடையோருடனே
ஒட்டிக்கொள்வர்.
வசதியற்றோரை
வெட்டிக்கொள்வர்.

நீ
செல்வந்தர்களின்
இல்லங்களில்
சோம்பேறியாய்த்
துயில்கொள்வதைவிட
ஏழைகள் எங்களின்
குடிசைகளுக்கு
வருகை தந்து-எங்களின்
வயிறுகள் நிரப்பலாமே!

நீ ஏன்
செல்வந்தர்களின்
பெட்டிகளுக்குள்
சிறைபட்டுக் கிடக்கின்றாய்?

எங்களின்
இல்லங்களுக்கு-நீ
வருகை தந்தால்
நாங்கள் உனைச்
சுதந்திரமாகத்
திரியவிடுவோமே!

செல்வந்தர் வீட்டில்
சிறைபட்டுக் கிடப்பதே
உன் விருப்பமா?
ஏழைகள் எங்களின்
இல்லங்களுக்கு
வருகை தந்து
சுதந்திரக் காற்றை
சுவாசிக்கமாட்டாயா?

 ஏழை வீட்டுக்கு
வருகை தந்து-எங்கள்
குழந்தைகளின்
பசிபோக்க மாட்டாயா?

எங்கள் பிள்ளைகளின்
உயர்படிப்புக்கு
உதவிசெய்ய மாட்டாயா?

இங்கே
வெம்பி வாடும்-முதிர் 
கன்னிப் பெண்டிரின்
திருமணத்தை
நடத்தி வைக்கமாட்டாயா?

தினம் தினம்
துன்பத்தில் துவளும்-எங்கள்
துயரத்தைக் களைந்திட-எம்
இல்லங்களுக்கு-நீ
என்றுதான்
வருகை தருவாயோ?

உன்
வரவுக்காகக்
காத்திருக்கும்
பரம ஏழை..