24.3.19
23.3.19
19.3.19
தோள் கொடுத்த தோழர்கள்!
-கவிஞர் நூ. அப்துல்
ஹாதி பாகவி
இறைவாழ்த்து!
எழுதுகோலால் கற்பித்த
ஏக இறைவா!
கவித்திறன் எனக்களித்த
புவியாளும் இறைவா!
கவியால்
புகழ்கின்றேன் உனையே!
பார் முழுக்கப் பரவி
பார் போற்றும் வண்ணம்
பாங்கான சேவையைப்
பாரெங்கும் செய்துவரும்
பாகவிகள் பலரை
பாங்கான நல்லூரில்
ஒன்றிணைத்த இறைவா!
பூமியின் பொருளெல்லாம்
பூரணமாய்ச் செலவிட்டாலும்
புவியோர் நெஞ்சமதில்
புகுத்திட முடியாத
அன்பை
பொருளேதும் செலவின்றி
பாகவிகள் நெஞ்சங்களில்
பேரன்பை விதைத்த இறைவா!
பாகவிகள் நெஞ்சங்களை
ஒற்றை நெஞ்சாக்கிய
ஓரிறைவா!
ஓங்கிய புகழ் யாவும்
ஓங்கட்டும் உனக்கே!
--------------------------------
இறைத்தூதர் வாழ்த்து!
அகில மக்கள் அனைவருக்கும்
அருட்கொடையாய்
இருள்நீக்கும் ஒளியாய்
சீரிய வழிகாட்டியாய்ச்
சிறந்தோங்கும் அண்ணலே!
பிறந்தகத்தைத் துறந்து
பிறிதோர் இடம்தேடிச்
சென்று
பிரியமானவனின் மார்க்கத்தைக்
குவலயத்தில் பரப்பிய
கருணைமிகு இறைத்தூதரே!
பாருலகு மக்கள் யாவரும்
பாதை தவறிடாமல்
பாதுகாப்பாய்ப் பயணிக்க
வழித்தடம் அமைத்துச்
சென்ற
உங்கள்மீது இறையருள்பொழிய
இறைவனிடம் இறைஞ்சுகிறேன்!
அவையோர் வாழ்த்து!
பிரபஞ்சத்தின்
மூலை முடுக்கெல்லாம்
வேலை செய்யும்
மூத்தோரே! இளையோரே!
அத்திக் கடைதனில்
அத்திப் பூக்களாய்ப்
பூத்திருக்கும்
அத்தனை பாகவிகளுக்கும்-என்
சத்தான சலாமை
உரித்தாக்குகிறேன்!
“மூன்றெழுத்தில் என்
மூச்சிருக்கும்-அது
முடிந்த பின்னாலும்-என்
பேச்சிருக்கும்”-என்ற
கவிதை வரிகளுக்கொப்ப
‘பாகவி’ எனும்
மூன்றெழுத்தில்
உங்கள் மூச்சும்-அது
முடிந்த பின்னாலும்
உங்கள் சேவை குறித்த
பேச்சும்
இப்பாரினில்
நின்று நிலவட்டுமென
வாழ்த்துகிறேன்!
-------------------------------
தலைவர் வாழ்த்து!
பாகவிகளின்
பாட்டரங்கிற்குத்
தலைமையேற்ற நீர்
பார்போற்றும்
பாட்டரங்கிற்குத்
தலைமையேற்க
வாழ்த்துகிறேன்!
பாருலகெல்லாம் உம்
பாட்டின் புகழ் பரவ
பட்டிதொட்டியெல்லாம்
உம்
பாட்டின் புகழ் ஓங்க
படைத்தோனிடம் இறைஞ்சுகிறேன்!
------------------------------------------------------
தோள்கொடுத்த தோழர்கள்!
பாக்கியாத் எனும்
பாக்கியம் நிறைந்த
தோட்டத்தில் நான்
ஒரு செடியாக இருந்தபோது
தண்ணீர் ஊற்றி
என்னை வளர்த்தவர்கள்!
நான்
பள்ளிப்படிப்பைப்
படிக்க முயன்றபோது
ஏணிப்படிகளாய் இருந்து
என்னை
ஏற்றிவிட்டவர்கள்!
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வெழுத
பாடம் சொல்லிக்கொடுத்தவர்கள்!
தொலைநிலைக் கல்வி
மூலம்
இளங்கலை வரலாறு
இனிதே படித்துயர
கனிவாய் வழிகாட்டியவர்கள்!
நான் அவர்களுக்குச்
சொல்லொணாத் துன்பங்கள்
தந்தபோதிலும்-என்னைச்
சொல்லாலும் சுடாதவர்கள்!
சொக்கத் தங்கத்தைப்
போன்றவர்கள்!
பொருளாதாரச் சிக்கலில்
சிக்குண்டபோது
அருளாக வந்து
பொருளுதவி செய்த
புண்ணியவான்கள்- இன்றைய
கண்ணியவான்கள்!
நான்
கவிதை என்று
எதையெதையோ
கதைத்தபோதும்
கைதட்டி மகிழ்ந்து
உற்சாகப்படுத்தியவர்கள்!
நான்
பாட்டென்று
எதையெதையோ
படித்தபோது
பிடிக்கவில்லையெனத்
தடுத்திடாமல்
துணிவூட்டியவர்கள்!
ஆரவாரம் செய்து
ஆர்வமூட்டியவர்கள்!
எழுதுகோல் பிடித்து
எப்போதும் எழுதிய
என்னைத்
தப்பாமல் கண்டறிந்து
அல்இர்ஷாத்
மாணவக் கையேட்டுப்
பிரதிக்கு
ஆசிரியராக்கியவர்கள்!
சோகமான நேரத்தில்
கண்ணீர் துடைக்கும்
கைக்குட்டையாய்
இருந்தவர்கள்!
ஊமையாய் இருந்த எனை
உற்சாகப்படுத்திப்
பேசவைத்தவர்கள்.
பட்டம் பெற்றபின்
சட்டம் சொல்ல
மக்களை நோக்கிச்
சென்றபிறகும்
பழைய நட்பை மறந்திடா
நினைவுப் பெட்டகத்தினர்!
இல்வாழ்வில் கரம்கோக்க
இல்லாளைத் தேடித்தந்து
இல்லற வாழ்வைத்
தொடங்கிவைத்தவர்கள்!
தொடக்கம் முதல்
இறுதி வரை
என்னைத் தொடர்ந்து
வந்து
தோள் கொடுத்துத்
தூக்கி நிறுத்திய
பாக்கியமிகு தோழர்கள்
பாக்கியாத் ஈன்றெடுத்த
பாகவிகள்!
=======================
21.11.15
மீண்டும் நரகாசுரன்
நேற்று
மீண்டும் வந்தான்
இல்லாப் பெயர்கொண்ட
மூட நரகாசுரன்.
ஆண்டு முழுவதும்
அரும்பாடுபட்டுச்
சம்பாதித்த பணத்தையெல்லாம்
வெடியாகக் கொளுத்திக்
கரித்தான்;
புகைத்தான்.
கூரை வேய்ந்திருந்த
அந்த
ஏழை வீட்டின்
ஓலைக் குடிசையையும்
வெடியால் கொளுத்திச்
சாம்பலாக்கினான்.
வெடி எனும்
ஆயுதம் கொண்டு
பலரைக் காயப்படுத்தினான்;
சிலரைக் கொன்றான்.
மற்றோரெல்லாம்
சீக்கிரம் இறந்திடவே
நச்சுப் புகையால்
சுற்றுச்சூழலை
நாசப்படுத்தி
மரணவலை விரித்தான்.
வீதிகளையெல்லாம்
குப்பைகளாக்கித்
தோட்டிகளுக்கு
வேலை கொடுத்தான்.
கடும் சப்தவெடிகளை
இரவினில் வெடித்து
எங்களின்
இரவுத் தூக்கத்தைக்
கெடுத்தான்-அவன்
மகிழ்ந்தான்.
மீண்டும்
அடுத்த ஆண்டு
வருவேன்-என
எச்சரித்துச் சென்றான்.
-பாகவியார்
================================
17.10.15
ஆணாகப் படைத்ததேன்?
-பாகவியார்
இறைவன் உன்னை
ஆணாகப் படைத்ததேன்?
பெண்ணை
நிர்மூலமாக்க அல்ல!
நிர்வாகம் செய்யத்தான்!
அவளின் கற்பைச்
சூறையாட அல்ல!
உன் சகோதரியாய்க்
கவனித்துக்கொள்ளத்தான்!
கண்ட இடங்களில்
வம்பு செய்ய அல்ல!
உன் அன்னையைப் போல்
அன்பு காட்டத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்ததேன்?
பெண்ணிடம்
கைநீட்டிப்
பெறுவதற்காக அல்ல!
மஹர் கொடுத்து
மங்கை நல்லாளை
மணமுடிக்கத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்து
நிதானத்தை வழங்கியதேன்?
அவள் அறியாமையால்
சினம் கொள்ளும்போது
மனம் வெதும்பாமல்
எதிர்கொள்ளத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்து
வீரத்தை வழங்கியதேன்?
கட்டிய மனைவியை
ஓங்கி அடிப்பதற்காக அல்ல!
அவளுக்கொரு
துன்பமென்றால்
துணிவோடு போராடத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்து
பொறுப்பை வழங்கியதேன்?
அவள் உழைப்பில் நீ
உண்பதற்காக அல்ல!-நீ
உழைத்து
அவளுக்கு
உணவு வழங்கத்தான்!
உன்னை
ஆணாகப் படைத்துப்
பெண்ணைவிட
ஒரு படி
உயர்வைக் கொடுத்ததேன்?
அவளை அடிமையாய்
நடத்துவதற்காக அல்ல!
அவளின் தேவைகளை
முறைப்படி
நிறைவேற்றிடத்தான்!
18.6.14
Subscribe to:
Posts (Atom)