21.5.12

முனையாமல் முடங்கலாமா?



திருக்குர்ஆன் விரிவுரையைத்
தினந்தோறும் திறந்தோதுவோர்
திருக்குறளைத் திறந்திட்டால்
திருக்கரங்கள் கறையாகுமோ?


குர்ஆனைத் தொடும் கரங்கள்
குவலயத்தை இணைக்கின்ற,
குக்கிராமத்தில் பரவிவிட்ட
இணையத்தைத் தொடுவது
இணையற்ற தீங்காகுமோ?


அல்லாஹ்வின் வேதத்தை
நன்றாகக் கற்றவர்கள்
ஆட்சியர் ஆகுவதும்
அதிகாரத்தைப் பெற முனைவதும்
அடாத பாவமாகுமோ?


அருள்மறையின் மொழியான
அரபிமொழி கற்றவர்கள்
ஆங்கிலத்தைக் கற்பது
அல்லாஹ்வுக்கு எதிராகுமோ?


அரபிக் கல்லூரிக்குள்
ஆங்கிலமும் கணினியும் 
அவசியம் கருதி
அன்றாடம் கற்பித்தல்
ஷரீஅத்துக்கு முரணாகுமோ?


ஒரு வட்டத்திற்குள்
ஒடுங்கிவிட்டவர்கள்
வட்டத்தின் வெளியே
எட்டிப் பார்க்க முனைவது
வெட்டி வேலையாகுமோ?


எட்டாக் கனியை
எட்டிப் பிடிக்கத் துணிவதும்
கிட்டாத பணியை
முட்டிமோதிப் பெறுவதும்
சட்டப்படி பிழையாகுமோ?


பிறருக்குப் போட்டியாய்
போட்டியிட்டு உழைப்பதும்
பிறருக்குப் போட்டியாய்
போட்டியிட்டுச் சம்பாதிப்பதும்
இஸ்லாத்தில் தடையாகுமோ?


காலமே கருதி
கடமையைச் செய்யாமல்
காலம் தாழ்த்தி,
கல்போன்று வாழ்வது
கல்வி கற்றோர்க்கு அழகாகுமோ?


காலத்தின் அருமை கருதி 
பல்வகைத் திறமைகளை 
நல்வகையில் பெருக்கிக்கொள்ளல்
எவ்வகையில் பாவமாகுமோ?


உலக மக்கள் யாவருமே
உயரப் பறக்க முனையும்போது-நீ
ஒடுங்கியே வீட்டுக்குள்
நடுங்கியே வாழலாகுமோ?
விழிக்காத உன் கண்கள்
வழிதேடாமல் உறங்கலாகுமோ?


உன் வாழ்வில் நீ உயர
நான் உனைத் தூண்டுவது
என்மீது பிழையாகுமோ?
உன்மீது பிழையாகுமோ?


28.4.12

வாழ்த்து மடல்

என் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு நான் எழுதி வழங்கிய வாழ்த்து மடல்.  

22.10.11

மணமகளுக்கு அறிவுரை

மணமகளுக்கு அறிவுரை கூறுவதுபோல் நான் எழுதிய மணவாழ்த்து மடலிது.


பல்லாண்டுகள் காத்திருந்து-உன்
புன்னகை முகம் காணவே
இன்று உனைத் தேடி வரும்
உன் வாழ்க்கைத் துணைவரை
உன் உதட்டோரப் புன்னகையால்
அன்பாக வரவேற்று மகிழ்வாய்!

இன்பமும் துன்பமும்
ஒன்றன்பின் ஒன்றாக
ஓயாது வந்தாலும்-உன்
உதட்டோரப் புன்னகையே
உன்னவரின் உள்ளத்திற்கு
நன்மருந்தாகட்டும்!

ஆழியில் ஓயாத
அலைகளைப் போல்
நாள்தோறும் வீசிடும்
தென்றலைப்போல்
ஓயாது ஓடிடும்
காலத்தைப்போல்
தடையின்றிப் பாய்ந்தோடும்
நதியினைப் போல்-உம்
இனிய இல்லறத்தில்
இன்பமே நிலைக்கட்டும்!

விண்ணை நீங்கா
மதியைப்போல்
கண்ணை நீங்கா
இமையைப்போல்
கைவிட்டு நீங்கா
ரேகையைப்போல்-உன்
இனிய துணைவரை
நீங்காது வாழ்ந்திடுவாய்!

பூந்தோட்ட மலர்கள்-நாளும்
பூத்துக் குலுங்கிக்
காண்போர் உள்ளத்தைக்
கொள்ளை கொள்வதுபோல்-உன்
செவ்வாய் இதழ்விரித்துச்
சிரித்திடும் சிரிப்பாலே-உன்
துணைவரைக் கவர்ந்து
இல்லறத்தைத் தொடர்வாய்!

செடியில் பூத்த மலர்கள்
வாடிவிட்ட போதிலும்
மறுநாள் பூப்பதைப் போல்
உனை ஒரு துன்பம்
தொட்டுவிட்ட போதிலும்
வாடி வதங்கித் தளர்ந்திடாமல்
நித்தமும் நீ பூப்பாய்!
புகுந்த குடும்பத்திற்குப்
பெருமை பல சேர்ப்பாய்!

வண்ண வண்ணப் பூக்கள்
சோலைக்குப் பெருமை
மின்னும் விண்மீன்கள்
வானுக்குப் பெருமை
துள்ளும் மீன்கள்
ஆழிக்குப் பெருமை
வளமான பயிர்களே
வயலுக்குப் பெருமை
நல்ல மழலைகளே
தாய்மைக்குப் பெருமை!

மதிநுட்ப மழலைகள்
நனிசிறக்கப் பெற்று
குறைவற்ற செல்வத்தை
நிறைவாகப் பெற்று
இனிய இல்வாழ்வை
இன்புற்றுக் களித்திடுவாய்!
இன்றுபோல் என்றென்றும்
இன்பமாய் வாழ்ந்திடுவாய்!

இறையோனின் வார்த்தைகளை
இதயத்தில் ஏற்று
இறைத்தூதர் வாழ்க்கைதனை
இனிமையாய்க்கொண்டு
இகத்தினில் என்றென்றும்
இதமாய் நீவிர்
இன்புற்று வாழ்ந்திட
இனிதே வாழ்த்துகிறோம்!

அன்புடன்
நூ. அப்துல் ஹாதி பாகவி 
குடும்பத்தினர் 

15.10.11

மணவாழ்த்து மடலிது



மணாளர் : S. முஹம்மது அப்துல்லாஹ் B.E., M.B.A.,
மணாளி : S. ராபியத்துல் ஃபஜ்ரியா
மணநாள் : 15.10.2011 (17.11.1432) சனிக்கிழமை
மணவிடம் : ஆணைக்கார் அப்துல் ஷுகூர் கலையரங்கம், புதுக்கல்லூரி.



சிதறிக்கிடந்த முத்துக்களைச்
சிறு நூலில் கோர்த்தாற்போல்
பரவிக் கிடந்த மலர்களை
ஒரு நூலில் சேர்த்தாற்போல்
எங்கோ பிறந்த ஈருயிர்கள்
இங்கு ஒன்றாய் இணைவதைக் காணீர்!

பார்ப்போரெல்லாம் வாழ்த்தும்வண்ணம்
பாரினில் பிணைந்திட்ட தம்பதிகாள்!
பாருக்கெல்லாம் இறைத்தூதரான
பார்போற்றும் உத்தமர் வழியிற்சென்று
சீர்மிகு இல்லறத்தை- நீவிர்
சீரோடும் சிறப்போடும் நடத்திடுவீர்!

வண்ண வண்ணப் பூக்கள்
சோலைக்குப் பெருமை
மின்னும் விண்மீன்கள்
வானுக்குப் பெருமை
செழித்த பசும்பயிர்கள்
வயலுக்குப் பெருமை
பணிவான பெண்ணே
இல்லத்தின் பெருமை!

அன்பான கணவரைக்
கரம்பிடித்த நங்கையே!-உன்
பண்பாலும் பணிவாலும்
அவருள்ளம் கவர்வாயே!-இனிய
சொல்லாலும் செயலாலும்
கல்பட்ட நெஞ்சமும் பஞ்சாகும்
நல்வஞ்சியே! நீஇதை உணர்வாயே!

இறைமறையின் வாக்குகளை
இதயத்தில் ஏந்தி-நீவிர்
மறை வாழ்வு வாழ்வீரே!
நிறை வாழ்வு வாழ்வீரே!
குறையற்ற வாழ்க்கைதனை-இக்
குவலயத்தில் வாழ்ந்து-நீவிர்
ஒருவருக்கொருவர் காக்கும்
திரையாக ஆவீரே!

விட்டுக்கொடுத்தோர்
கெட்டுப் போனதில்லை-எனும்
பட்டறிவுப் பழமொழியைப்
பட்டென மனதில் ஏற்று
விட்டுக்கொடுத்து வாழ்ந்திடுவீர்!-நீவிர்
தட்டிக்கொடுத்து உயர்ந்திடுவீர்!

இன்பங்கள் எத்துணைதான்
இவ்வுலகில் இருந்தாலும்
இனியதொரு துணைவிபோல்
இன்பம் ஆங்குண்டோ?
பார்க்கும் இடமெல்லாம்
பாவைகள் பலர் இருந்தாலும்
பாரினில் அன்புமிகு
துணைவிபோல் உண்டோ?

பரந்து விரிந்திட்ட
பசுமையான இப்பாரினிலே
திறந்த மனத்துடனே
இனிய நற்பண்புடனே
சிறந்த இல்வாழ்வைச்
சீரோடும் சிறப்போடும்
பிறர் போற்ற நீவிர்
பல்லாண்டு வாழ்ந்திடுவீர்!

உள்ளங்கள் ஒன்றுபட்ட
நல்ல எண்ணங்களோடு
உள்ளவரை உலகில் வாழ
உளமார வாழ்த்துகிறோம்!-நீவிர்
இருவரும் இணைந்தே
இப்பாரினில் நீடூழி வாழ
இருகரமேந்தி-தூய
இறைவனிடம் இறைஞ்சுகிறோம்!

வாழ்த்தும் நெஞ்சம்

நூ.அப்துல் ஹாதி பாகவி

25.2.11

சுயநலவாதி